பதிவு செய்த நாள்
15
பிப்
2018
12:02
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், சிவராத்திரியையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழாவையொட்டி, இரண்டு நாட்கள் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பூலாங்கிணறிலிருந்து எடுத்து வரப்பட்ட சப்பரம், கோவிலில் ஸ்தாபிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்றுமுன்தினம் இரவு முழுவதும், மங்கள இசை, பரதநாட்டியம், சொற்பொழிவு உட்பட நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று அதிகாலை, மும்மூர்த்திகளுக்கு, நடந்த சோடச தீபாராதனையில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை பஸ் ஸ்டாண்டிலிருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. உடுமலை முத்தையா பிள்ளை லே-அவுட், சித்தி விநாயகர் கோவிலில், சோழிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பிரசன்ன விநாயகர் கோவிலில், காசி விஸ்வநாதருக்கு, சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.காந்திநகர் சுந்தரேஸ்வரர், கொடிங்கியம் மகாலட்சுமி அம்மன், சோமவாரப்பட்டி அமரபுயங்கீஸ்வரர் உட்பட பல்வேறு கோவில்களில், சிவராத்திரி மற்றும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடந்தன.