பதிவு செய்த நாள்
15
பிப்
2018
01:02
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பூச்சியூரில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன், சிவராத்திரி விழா ஊர்வலம் நடந்தது. நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள பூச்சியூரில் மகாலட்சுமி, வேட்டைக்காரசாமி, வீரபத்திரசுவாமி தொட்டம்மாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் இக்கோவில்களில் சிவராத்திரி விழா, விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூச்சியூர் கோவில் மைதானத்தில், மூன்று சுவாமிகளின் அலங்காரங்கள் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய நடந்தன. நேற்று காலை, 6:00 மணிக்கு, மகாலட்சுமி அம்மன் ஊர்வலம் நடந்தது. இதைதொடர்ந்து நடந்த வேட்டைக்காரசுவாமி ஊர்வலத்தில், பக்தர்கள் ஆடுகளை பலியிட்டு, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். ஊர்வலத்தில், கோவில் பூசாரி ஆணிக்கால் செருப்பு அணிந்து நடந்து வந்தார்.
தொடர்ந்து, வேட்டைக்காரசாமி மலர் அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடைசியாக, வீரபத்திரசாமி தொட்டம்மாள் ஊர்வலம் நடந்தது. கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த மலர் பாதையில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். பூச்சியூர், நரசிம்மநாயக்கன்பாளையம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். பூச்சியூர் வேட்டைக்காரசாமி கோவிலில், சிவராத்திரி முன்னிட்டு நடக்கும் ஊர்வலத்தில், கோவில் பூசாரி பெண்கள் மீது ஆணிக்கால் செருப்புடன் நடந்து வருவது வழக்கம். கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், இந்நிகழ்ச்சி நடந்தபோது, இது மனித உரிமை மீறிய செயல், என பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் போர்க்குரல் எழுப்பின. மனித உரிமை அமைப்பின் பிரதிநிதிகளும் நேரில் ஆய்வு நடத்தினர். இதைத்தொடர்ந்து, இச்சடங்கை நடத்த காவல் துறை தடை விதித்தது. ஆண்டுதோறும், சிவராத்திரி விழாவின், இச்சடங்கு நடக்கிறதா என, போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவது வழக்கம். இந்தாண்டும் சிவராத்திரி விழாவையொட்டி, நேற்று காலை வேட்டைக்காரசுவாமி ஊர்வலம் வரும்போது போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.