பதிவு செய்த நாள்
15
பிப்
2018
01:02
ஊட்டி: கோத்தர் இன மக்கள், தங்களின் பாரம்பரியங்களில் ஒன்றான நடன பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள், தங்களின் பாரம்பரியம், கலாசாரத்தை சிறிதளவும் சிதையாமல் பாதுகாத்து வருகின்றனர். இதில், மஞ்சூர் அருகேயுள்ள குந்தா கோத்தகிரியில் உள்ள கோத்தர் இன பழங்குடியின மக்கள், ’ஆட்டபபூப்’ என அவர்களது மொழியில் அழைக்கும் நடனப்பண்டிகையை கொண்டாடினர். அங்குள்ள மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு துவங்கிய பண்டிகை, 3:30 மணி வரை நீடித்தது. குளிரை விரட்ட, தீ மூட்டி நடனமாடி மகிழ்ந்தனர்.
அங்குள்ள மக்கள் மட்டுமன்றி சோலுார், கோக்கால், திருச்சிக்கடி உட்பட பகுதிகளில் இருந்தும், கோத்தர் இன மக்கள் பங்கேற்றனர். இரவு நடந்த விழாவில், ஆண்கள், பெண்கள், தங்களின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். அவர்கள் வீடு, வீடாக சென்று, ஒருவருக்கொருவர் சொந்தம் பாராட்டி, விருந்துண்டு மகிழ்ந்தனர். இரண்டாவது நாளாக, நேற்றுநடந்த பண்டிகையில், பெண்கள் பாரம்பரிய உடையணிந்து, நடனமாடி, பண்டிகையை கொண்டாடினர்.
ஊர் தலைவர் குருபன் கூறியதாவது: எங்களின் குல தெய்வ மான ’அயய்னோர், அம்மனோர்’க்கு, வாய்மொழி பிரார்த்தனையும், நடன வழிபாடும் தான் பிரதானம்; அவ்வகையில், எங்களின்முன்னோர் காலந்தொட்டு, நடன பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இதில், ஊர் செழிக்க வேண்டும்; மக்கள், நோயின்றிசுக வாழ்வு வாழ வேண்டும்; காலம் தவறாமல் மழை பொழிய வேண்டும் என்பது போன்ற வேண்டுதல்களை முன்வைப்போம். ஊரில் உள்ள மிகவும் பழமையான மரத்தின் முன்பு இந்த நடனம்நடக்கும். மேலும், எங்கள் ஊரில் இருந்து பெண் எடுத்தோர், கொடுத்தோர் வாழும் ஊர்கள், உறவினர்கள் வாழும் கிராமங்களில் இருந்தும் மக்கள் பண்டிகையில் பங்கேற்பர்; இதன் மூலம், எங்கள் உறவுகள் பலப்படும்; ஒற்றுமை மேம்படும்.இவ்வாறு, குருபன் கூறினார்.