பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
பாகூர் : பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு மற்றும் ஆறு கால பூஜைகளுடன், மகா சிவராத்திரி விழா நடந்தது. பாகூரில், 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு மற்றம் மகா சிவராத்திரி விழா நடந்தது. இதனையொட்டி, 3.30 மணிக்கு, செல்வ நந்திபெருமானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு, முதல் கால பூஜையுடன் மகா சிவராத்திரி விழா துவங்கியது. 9:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, 11:00 மணிக்கு, மூன்றாம் கால பூஜை, நள்ளிரவு 1.30 மணிக்கு, நான்காம் காலபூஜை, நேற்று (14ம் தேதி) அதிகாலை 3.30 மணிக்கு, ஐந்தாம் கால பூஜை நடந்தது. காலை 5.30 மணிக்கு நடந்த ஆறாம் கால பூஜையின் போது, கோ பூஜை செய்யப்பட்டு, மகா தீபாராதணை நடந்தது. சந்திரசேகரர், மனோன்மணியம் அம்மன் கோலத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு முழுவதும் ஆன்மிக சொற்பொழிவு மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.