பதிவு செய்த நாள்
15
பிப்
2018
02:02
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு : திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் அமைந்துள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி வழிபாடு நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இரும்பைமாகாளேஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் மாலை 7:00 மணிக்கு ஆரம்பித்து, நேற்று காலை 6:00 மணி வரை, சுவாமிக்கு நான்கு கால பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. விடிய விடிய நடந்த விசேஷ பூஜைகளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் பஞ்சாபகேசன், வைத்தியநாதன், சுவாமிநாதன், கார்த்திகேயன் மற்றும் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். பூத்துறையில், ஊசுடு ஏரிக்கரை அருகே அமைந்துள்ள அவிமுக்தேஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்துக்கு இரவு முழுவதும் பூஜை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை, சிபி நடத்தினார். சிவனடியார்கள், திருவாசக பாடல்களை பாடினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருச்சிற்றம்பலம் கைலாசநாதர் கோவில், ஒழிந்தியாப்பட்டு அரசலீஸ்வரர் கோவில், கிளியனுார் அகத்தீஸ்வரர் கோவில் மற்றும்ஓமந்துார் பீமேஸ்வரர் கோவிலில் இரவு முழுவதும் சாமிக்கு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது.