பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
ஊட்டி ; ஊட்டி அடுத்துள்ள, சோலுார் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா, 23ம் தேதி துவங்குகிறது. நீலகிரி மாவட்டம், சோலுார் மலை அடிவாரம், மசினகுடி அருகே அமைந்துள்ளது பொக்காபுரம். இங்கு எழுந்தருளியுள்ள, ஆதிபராசக்தியின் முக்கிய அவதாரமான பொக்கா அம்மனை மசினகுடி, மாயார், சிறியூர், ஆணைகட்டி, சொக்கநல்லி, சோலுார் போன்ற கிராமங்களில் மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் ரிஷப லக்னத்தில் தேரோட்டம் நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் பொக்கா அம்மன், மசினி அம்மன் சிக்கம்மன், சீரியம்மன், ஆனைக்கல் அம்மன், கொக்கரல்லி அம்மன், தண்டுமாரியம்மன் ஆகியோர் ஒரு சேர வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பதாக, ஐதீகம் உள்ளது.
நடப்பாண்டுக்கான திருவிழா, 23ம் தேதி நடை திறப்புடன் துவங்குகிறது. 24ம் தேதி மாலை, 6:00 மணிக்கு விளக்கு ஏற்றுதல், 25ம் தேதி இரவு, 8:00 மணிக்கு கங்கை பூஜை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல், 27ம் தேதி காலை, 10:00 மணிக்கு மாவிளக்கு பூஜைகள் வெகு விமரிசையாக நடக்கிறது. முன்னதாக, பக்தர்கள் மசினகுடி பகுதியில் இருந்து கரகம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி உட்பட பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர். விழாவையொட்டி, ஊட்டி, கூடலுார், கோத்தகிரி பகுதிகளில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.