குற்றாலம் : கேரளாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்கள் இயக்கப்படுவதால் குற்றாலத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. முல்லை பெரியாறு அணை பரச்சனை காரணமாக கடந்த 5ம் தேதி முதல் இருமாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து பதட்டம் நிலவி வந்ததால் வடமாவட்டங்களில் கேரளாவிற்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டதின் காரணமாக அப்பகுதி வழியாக சபரிமலை செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். ஒரு சில பக்தர்கள் தங்களின் வாகனங்கள் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை வழியாக கேரளா சென்று வந்தனர். இந்த வழிப்பாதையும் பரச்சனை ஏற்பட்டதால் நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக பக்தர்களும், அத்தியாவசிய பொருட்களும் ஏற்றி செல்லப்பட்டன. இந்த வழிப்பாதை சுமூகமாக இயங்கி வந்த நிலையில் தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனஙகள் தொடர்ந்து சேதப்படுத்தப்பட்டு வந்தன. தமிழர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அதிகரித்ததால் ஆரியங்காவு வழிப்பாதையிலும் பதட்டம் நிலவியதால் இருமாநில எல்லை பகுதிகளிலும் சம்பந்தப்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தப்பட்டதின் அடிப்படையில் தற்போது கடந்த இரண்டு நாட்களாக சுமூகமான நிலை ஏற்பட்டு வருவதால் எவ்வித சிரமமும் இன்றி 10 வாகனங்களுக்கு ஒரு போலீஸ் ஜீப் மற்றும் போலீசார் அடங்கிய வேனும் எல்லை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதால் ஐயப்ப பக்தர்களும், வாகனங்களும் சிரமமின்றி சென்று வருகின்றனர். கேரள வாழ் மலையாளிகள் தமிழகத்தில் தாக்கப்படக்கூடும் என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்கி செல்லாமல் தட்டிக்கழித்து வந்த மலையாளிகள் தற்போது தமிழகத்திற்கு பாவூர்சத்திரம், சுரண்டை போன்ற பகுதிகளுக்கு வந்து நேரடி கொள்முதல் செய்துகேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். இப்பாதை வழியே செல்ல சுமூகமான நிலை நிலவி வருவதையடுத்து ஐயப்பன் கோயிலுக்கு ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கூட்டமும், தரிசித்து திரும்பும் பக்தர்களின் கூட்டமும் குற்றாலத்தில் முகாமிட்டுள்ளதால் குற்றாலத்தில் பக்தர்கள் நெருக்கடியும், வாகன நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.