பதிவு செய்த நாள்
27
பிப்
2018
05:02
விருத்தாசலம்: 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் தலவிருட்சமான வன்னிமரத்தை மரபு ரீதியாக மீட்டெடுக்கும், மண்டல ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மேற்கொண்ட முயற்சி வெற்றியடைந்துள்ளது.
‘காசியிலும் வீசம் பெரிது விருத்தகாசி’ எனும் சிறப்புடைய விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் 1,500 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஐந்து கோபுரம், ஐந்து கொடிமரம், ஐந்து பிரகாரம், ஐந்து நந்தி, ஐந்து தேர், ஐந்து தீர்த்தம், பஞ்சமூர்த்திகள் என ஏராளமான ஐந்தின் சிறப்புகள் உள்ளன. இக்கோவிலின் தலவிருட்சமாக 2,500 ஆண்டுகள் பழமையான வன்னிமரம் உள்ளது. இக்கோவிலில் சிவனை பிரதிஷ்டை செய்து, கோவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட விபச்சித்து முனிவர் பணியாளர்களுக்கு பணத்திற்கு பதிலாக, வன்னிமரத்தின் இலைகளை பறித்து கொடுத்ததாகவும், வீட்டிற்கு சென்று பார்க்கும்போது, அவரவர் உழைப்புக்கேற்ற ஊதியமாக மாறியதாக கூறப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மரத்தின் தண்டுப்பகுதி சேதமடைந்து, அருகிலுள்ள சுவற்றின்மீது சாய்ந்துள்ளது. இது போல் சேதமடைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள், மடங்களின் தலவிருட்சங்களை பதியங்கள் மூலமாகவோ, மரபு வழியாகவோ மீட்டெடுக்க, இரண்டு ஆண்டுக்கு முன் ஜெ., உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஓராண்டுக்கு முன் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் பதியம் மூலம் முயற்சித்தபோது, முளைக்கவில்லை. அதையடுத்து, 6 மாதங்களுக்கு முன் பண்ணை மேலாளர் குமார் மற்றும் உதவியாளர் நாராயணசாமி விதைகளை சேகரித்து, ரசாயண மருந்துகள் மூலம் மரபு வழியில் விதைப்பு செய்து முளைக்கச் செய்தனர். அதில், 30 வன்னிமரக் கன்றுகள் முளைத்துள்ளது. இதனால், முன்னாள் முதல்வர் ஜெ., உத்தரவின்படி, தலவிருட்சம் மீட்கப்பட்டுள்ளதால், வேளாண் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், வரும் 25ம் தேதி விபச்சித்து முனிவருக்கு, விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐ தீக திருவிழாவின்போது கோவில் வளாகத்தில் வன்னிமரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளதாக வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.