திருபுவனை: மதகடிப்பட்டு கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில், தேர் திருவிழா நேற்று நடந்தது. திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு 9.00 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் 25ம் தேதி மயானக்கொள்ளை விழா நடந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 6.30 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தேரில் வந்த அம்மனை, பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து 4.00 மணியளவில் பக்தர்கள் செடல் போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இன்று மாலை 6.00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.