பதிவு செய்த நாள்
28
பிப்
2018
01:02
ஓசூர்: ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நாளை தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
ஓசூர் தேர்ப்பேட்டை மலை மீது, மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் வெகுவிமர்சையாக தேர்த் திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா நாளை நடக்கிறது. அதையொட்டி, கடந்த மாதம், 28ல் பால்கம்பம் நடும் நிகழ்ச்சியும், தேர் கட்டும் பணிகளும் துவங்கின. அதைத்தொடர்ந்து கடந்த, 22 இரவு, 7:00 மணிக்கு, ஓசூர் கல்யாண சூடேஸ்வர சுவாமி குழுவினரால், அங்குரார்பணம் நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா துவங்கியது. கடந்த, 23 முதல், நேற்று இரவு வரை, சிம்ம வாகன உற்சவம், மயில் வாகன உற்சவம், ஏகாதசவார ருத்ராபி?ஷகம், நந்தி வாகன உற்சவம், நாக வாகன உற்சவம், ரிஷப வாகன உற்சவம், யானை வாகன உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் இன்று கல்யாணசூடேஸ்வரர் கோவிலில், இரவு, 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து நாளை காலை, 10:45 மணிக்கு, தேரோட்டம் நடக்க உள்ளது. இதில், தமிழகம், கர்நாடகா, ஆந்திரா என, மூன்று மாநிலத்தில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதால், 20க்கும் மேற்பட்ட இடங்களில் ’சிசிடிவி’ கேமரா, 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.