பதிவு செய்த நாள்
28
பிப்
2018
01:02
ஊட்டி; ஊட்டி அடுத்துள்ள சோலுார் பொக்காபுரம் மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஊட்டி அடுத்துள்ள சோலுார் மலை அடிவாரம், மசினகுடி அருகே அமைந்துள்ளது பொக்காபுரம் கிராமம். இங்கு எழுந்தருளியுள்ள, ஆதிபராசக்தியின் முக்கிய அவதாரமான பொக்கா அம்மனை மசினகுடி, மாயார், சிறியூர், ஆணைகட்டி, சொக்கநல்லி, சோலுார் போன்ற கிராமங்களில் மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும், மாசி மாதம் ரிஷப லக்னத்தில் தேரோட்டம் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்., 23ம் தேதி நடை திறப்புடன் துவங்கி, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. அதில், பக்தர்கள் மசினகுடி பகுதியில் இருந்து கரகம் எடுத்து வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதி மதன் லோகர், கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எம்.பி., அர்ஜூணன், அரசு துறை அலுவலர்கள், சோலுார் கிராம மக்கள் பங்கேற்றனர்.