பதிவு செய்த நாள்
01
மார்
2018
02:03
தஞ்சாவூர் : மதுரை மீனாட்சியம்மன் உட்பட, பல்வேறு கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்துகள், நாட்டுக்கு ஏற்படவிருக்கும் அசம்பாவிதத்தையே உணர்த்துகின்றன, என கோவை, காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தெரிவித்தார்.கும்பகோணத்தில் நேற்று, அவர் அளித்த பேட்டி:கும்பகோணம் மகா மக குளத்தில் புனித நீராடினால், பாவங்கள் நீங்கும் என, சாஸ்திரங்கள் கூறுகின்றன. திருவிழா நாட்கள் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும், குளத்தை துாய்மையாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ள, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக கோவில்கள் சிலவற்றில், முறையான வழிபாடுகள் நடப்பதில்லை. பூஜைகளின் போது, ஆகம விதிகள் முழுமையாக கடைபிடிக்கப் படுவதில்லை. அதனால் தான், சில கோவில்களில் தீ விபத்துகள் நடக்கின்றன.மதுரை மீனாட்சியம்மன் உட்பட, பல்வேறு கோவில்களில் ஏற்பட்ட தீ விபத்துகள், நாட்டுக்கு ஏற்படவிருக்கும் அசம்பாவிதத்தையே உணர்த்துகின்றன.இதை தடுப்பது, ஆட்சியாளர்களின் கடமை. அவர்களுக்கு அறிவுரை கூறி, நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் சாதுக்களுக்கும், சன்னியாசிகளுக்கும் உள்ளது. ஆனால், இப்போதைய சூழலில், சன்னியாசிகள் கூறுவதை கேட்டு நடக்க, அரசு முன்வருவதில்லை.தமிழகத்தில், 50 ஆண்டு களாக கோவில்களில், வழிபாட்டு முறைகள் பாதுகாக்கப்படவில்லை. மக்கள், ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட்டு, ஆன்மிக தலங்களை பாதுகாக்க வேண்டும். இதற்கான விழிப்புணர்வை, மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.