பதிவு செய்த நாள்
01
மார்
2018
02:03
ஈரோடு: கள்ளுக்கடை பத்ரகாளியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாநகரில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19ல், கொடியேற்றப்பட்டது. தினமும் காலையில் மூலவருக்கு, 12 வகையான திரவியங்களை கொண்டு, அபி?ஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று குண்டம் இறங்கும் விழா நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்த கோவில் பூசாரிகள், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, குண்டம் இறங்கி ஏறும் வரை, பராசக்தி தாயே நீ உடன் வர வேண்டும் என வேண்டிய பின், கோவில் பூசாரிகள் முதலில் குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து, 15 நாட்களாக விரதம் கடைபிடித்த, பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர், முதியவர் மற்றும் திருநங்கைகள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் இறங்குவதற்காக, கோவிலின் முன்பு இருந்து, பாலசுப்ராயலு வீதியின் எல்லை வரை, ஒரு கி.மீ., தூரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குண்டம் இறங்கிய பின் வெளியில் வந்த, பக்தர்களுக்கு, தன்னார்வலர்கள் பால், பழம், மோர், ராகி கூல், குளிர்பானங்களை வழங்கினர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பத்ரகாளியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில், சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.