பதிவு செய்த நாள்
01
மார்
2018
02:03
திருப்போரூர்: கந்தசுவாமி கோவில் பிரம்மோற்சவத்தின், 10ம் நாள் உற்சவமாக, தெப்போற்சவம், இன்று இரவு நடக்கிறது. திருப்போரூர் கந்தசுவாமி கோவில், பிரம்மோற்சவ விழா, 20ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.அன்றிலிருந்து நடைபெற்று வரும் விழாவில், முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நிறைவடைந்ததை தொடர்ந்து, இன்று இரவு தெப்போற்சவம் நடைபெறுகிறது.இரவு, 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கந்தசுவாமி பெருமான், சரவணப்பொய்கை குளத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ள தெப்பத்தில் எழுந்தருள்வார். பின், குளத்தில் ஐந்து முறை வலம் வந்து, கூடியிருக்கும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, மாடவீதிகளில் சுவாமியின் வீதியுலாவும் நடைபெறும். விழாவில், சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல, மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலும், இன்று தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.