பதிவு செய்த நாள்
02
மார்
2018
12:03
திருவண்ணாமலை: மாசி மக தீர்த்தவாரியில், அருணாசலேஸ்வரர், தன் தந்தைக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தங்கள் மூதாதையருக்கு திதி கொடுத்து, அருணாசலேஸ்வரரை வழிபட்டனர்.
திருவண்ணாமலையை ஆண்ட, வள்ளாள மஹாராஜாவிற்கு, குழந்தை பேறு இல்லாமல், அருணாசலேஸ்வரரை நினைத்து பிரார்த்தனை செய்தபோது, அருணாசலேஸ்வரரே அவருக்கு குழந்தையாக பிறந்தார் என, தல புராணங்கள் கூறுகின்றன. அதன் நினைவாக, ஆண்டுதோறும், மாசி மக தீர்த்தவாரியில், தன் தந்தைக்கு அருணாசலேஸ்வரர் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். அதன்படி, நேற்று திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில், பள்ளிக்கொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சலாறில், உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின், அருணாசலேஸ்வரருக்கு, துரிஞ்சலாற்றில், சூல வடிவில் தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து, சம்பந்தனுார் கிராம மக்கள், அருணாசலேஸ்வரருக்கு சம்பந்தம் கட்டும் நிகழ்வு நடந்தது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள்மூதாதையருக்கு திதி கொடுத்து, அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணா மலையம்மனை வழிபட்டனர். மேலும், சுவாமி, கோவிலுக்கு திரும்பும்போது, வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர்.