பதிவு செய்த நாள்
02
மார்
2018
01:03
முசரவாக்கம்: வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டதால், கச்சபேஸ்வரர் கோவில் கல் தரையில் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் இப்பொழுதே ஆரம்பித்து விட்டது. இரவில் பனி பெய்தாலும், பகலில் வெயில் கொளுத்துகிறது. காலை, 10:00 மணிக்கே, கல் தரையில் நடக்க முடியாத அளவுக்கு வெயில் தாக்கம் இருக்கிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பகல் நேரத்தில் வெளிப்பிரகாரத்தில் நடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும். காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோவில்களில் வெளியில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுத்தனர். கடந்த வாரம், வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக, தரை விரிப்பு அமைத்தனர். இப்போது, கச்சபேஸ்வரர் கோவில் வெளி பிரகார கல் தரையில், சூடு தாக்காத வகையில் வெள்ளை வண்ணம் அடித்துள்ளனர். அது போல, ஏகாம்பரநாதர் கோவிலிலும் தரை விரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.