பதிவு செய்த நாள்
02
மார்
2018
02:03
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், வேணுகோபால் சுவாமி தேரோட்டத்தில் பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். நாமகிரிப்பேட்டையில், பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. மாசி மாதத்தில் சுவாமிக்கு திருக்கல்யாணம், ரத உற்சவம் நடக்கும். இந்தாண்டு விழா, பிப்., 27ல் யாக சாலையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் ருக்மணி, சத்யபாமாவை வேணுகோபால் சுவாமிக்கு, ஆகம விதிப்படி, மங்கள வாத்தியம் முழங்க திருமணம் செய்து வைத்தனர். நேற்று காலை, சிறப்பு அபி?ஷகம் நடந்தது. மாலை, 3:00 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. ஒரு சங்கிலியை பெண்கள் பிடித்து இழுத்து வந்தனர். சிறிது நேரத்தில் பெண்கள் கூட்டம் அதிகமாகவே, இரண்டாவது பக்கமும் சென்று இழுத்தனர். தேர், கடைவீதி, பிரதான சாலை, அரியாகவுண்டம்பட்டி, சேனியர் தெரு வழியாக நிலை வந்து சேர்ந்தது.
காளியம்மன் கோவில் தேரோட்ட விழா: குமாரபாளையம், காளியம்மன் கோவிலில், நேற்று அம்மன் திருக்கல்யாணம், தேரோட்டம் மற்றும் வண்டி வேடிக்கை நடந்தது. பிப்., 13ல் பூச்சாட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் பூமிதித்தல் வைபவம் நடந்தது. நேற்று காலை, கோவில் வளாகத்தில் அம்மன் திருக்கல்யாண உற்சவம், தேரோட்டம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ராஜவீதி, சேலம் பிரதான சாலை, தம்மண்ணன் சாலை, புத்தர் வீதி வழியாக தேரோட்டம் நடந்தது. புத்தர் வீதியில் தேர் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று, தேர் அந்த இடத்தில் இருந்து புறப்பட்டு, கோவில் வளாகத்தில் நிலை நிறுத்தப்படும். ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். இரவில் வண்டி வேடிக்கை நடந்தது.