விருதுநகர்: விருதுநகர் ரயில்வே பீடர் ரோட்டில் அரசமரத்தடியில் முனீஸ்வரர்சுவாமி கோயில் உள்ளது. இங்கு கோபுரம் இல்லை, திறந்தவெளியில் சுவாமியின் உருவம் வரையப்பட்டுள்ளது. இதன்பின் அரிவாள் வைக்கப்பட்டுள்ளது. சுற்றி சிமென்ட்தளம், மரத்தடி நிழல் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள் சுவாமியை வணங்கிவிட்டு ‘ரிலாக்ஸ்’ ஆகின்றனர். வெள்ளியன்று கூட்டம் அதிகம் இருக்கும். ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பாதை என்பதால், உள்ளூர் தவிர வெளியூர் பக்தர்களும் வந்து செல்கின்றனர். பக்தர் வேலுச்சாமி, வயது (74), கூறுகையில், “60 ஆண்டுகளுக்கு மேல் இந்த கோயில் உள்ளது. அப்போது எப்படி இயற்கை சூழ இருந்ததோ அதுவே தொடர்கிறது. ஆடி கடைசி வெள்ளியன்று கிடா வெட்டி, 10 சேவல் அறுத்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். சுவாமியை வணங்கி விட்டு சென்றால், மனதில் திருப்தி ஏற்படும். வேண்டுதலும் உடனடியாக நிறைவேறும்,” என்றார்.