பொள்ளாச்சி;பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவைக்காவடி எடுத்து அம்மனை வழிபட்டனர். பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 13ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. விழாவையொட்டி கோவில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் தினசரி சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த 2ம் தேதி முதல் பக்தர்கள் பூவோடு ஏந்தி வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று முன்தினம், மார்க்கெட் ரோடு பகுதியிலிருந்து வந்த பக்தர்கள், 31ம் ஆண்டாக, ஆறு அடி நீளமுள்ள பறவைக்காவடி எடுத்தும், அலகு குத்தியும் அம்மனுக்கு பலர் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பறவைக்காவடி எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அப்போது, திருவீதி உலா வந்த அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, மார்க்கெட் ரோடு பகுதியில், அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் வரும், 7ம் தேதி துவங்குகிறது.