தாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ கற்பே சிறப்புடையது என்றும் வாழ்ந்து வந்தனர். இவர்களை சோதிக்க எண்ணினார் சிவபெருமான். பிட்சாடண கோலத்தில் சிவபெருமானும், மோகிணி கோலத்தில் திருமாலும் அவ்வனம் சென்று முனிவர்களின் தவத்தையும், துணைவியரின் கற்பையும் சோதித்தனர். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் தவத்தை அழித்தது மோகிணி அவதார மெடுத்த திருமால் என்றும், கற்பை பரிசோதித்தது பிட்சாடண ரூபம் கொண்ட சிவபெருமான் என்றும் தங்களது தவ வலிமையால் அறிந்தனர். அதனால் கோபம் கொண்டு விஷ மரங்களை குச்சிகளாக்கி அதை நெய்யில் நனைத்து ஹோமம் வளர்த்து வந்தனர். அதிலிருந்து வந்த பல கொடியப் பொருள்களை சிவனின் மீது ஏவினர். சிவனே அவற்றையெல்லாம் உடை, சிலம்பு, ஆயுதம், சிரோ மாலை, சேனை என்று உருமாற்றி தன்னிடம் வைத்துக்கொண்டார். தாங்கள் ஏவிய பொருள்கள் அனைத்தும் அவருக்கு ஆபரணமாகவும், படையாகவும் மாறியதை அறிந்த முனிவர்கள் பெரும் கோபம் கொண்டனர். மேலும் அதிக விஷமுள்ள பாம்புகளை சிவனின் மீது ஏவினர். அந்த பாம்பு உலகை நாசமாக்கும் பொருட்டு தன்னுடைய நான்து பற்களில் கடும் விஷத்துடன் சிவபெருமானை அடைந்தது அவரும் அதற்கு சிறிது பயப்படும் படி நடித்து விட்டு தன்னுடலில் ஏற்கனவே ஆபரணமாக உள்ள பாம்புகளுடன் சேர்ந்து விடும்படி கூறி சேர்த்தார். அப்பாம்புகள் அவருடலில் கங்கணம்(கைவளை, காப்பு) காலணி அரைஞான் கயிறு ஆகியவையாக அணிந்து கொண்டு காட்சிக் கொடுத்தார். தாருவனத்து முனிவர் ஏவிய பாம்புகள் அவரை அச்சுருத்தியமையால் அவரை புஜங்கத்ராச மூர்த்தி என்றனர். (புஜங்கள் - பாம்பு, திராசம் - பயப்படுதல்)
புஜங்கத்ராச மூர்த்தி யை தரிசிக்க நாம் செல்ல வேண்டி தலம் பெரும்புலியூர் ஆகும். இந்த சிவபெருமான் கோயிலில் தான் சிவன் தன்னுடைய ஆடையாக பாம்புகளை அணிந்த படி காட்சிக் கொடுக்கின்றார். இந்த வடிவத்தையே நாம் புஜங்கத்ராச மூர்த்தி என்கின்றோம். இவரை வணங்கினால் ராகு தோஷம் நிவர்த்தியடையும். இவருக்கு சோமவாரம் அல்லது குருவாரத்தில் வில்வார்ச்சனையும், சம்பா அன்ன நைவேத்தியமும் கொடுக்க கடன் தொல்லை தீரும். இங்குள்ள சிவபெருமானை மஞ்சள் நீரால் அபிசேகம் செய்ய ராகு கால தோஷம், சர்ப்ப கால தோஷம் விலகும்.