பதிவு செய்த நாள்
10
மார்
2018
02:03
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் தீமிதி திருவிழாவில், பாசுபத அஸ்திரம் வேண்டி, அர்ச்சுனன் தபசு மேற்கொண்ட நிகழ்வு, நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்களும் பங்கேற்றனர். பொதட்டூர்பேட்டை திரவுபதியம்மன் தீமிதி திருவிழா, கடந்த மாதம், 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினமும் மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடக்கின்றன. இதில், நேற்று மதியம், அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. குருஷேத்திர யுத்தத்தில், வெற்றி பெற ஏதுவாக, பாசுபத அஸ்திரம் வேண்டி, அர்ச்சுனன், தவத்தில் ஈடுபட்டார். கோவில் வளாகத்தில் நடப்பட்ட மரத்தின் உச்சியில் அமர்ந்து அர்ச்சுனன் தபசு மேற்கொள்ள, அதன் அடியில் நின்று பக்தர்களும், தவத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வை காண, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். தவத்தின் முடிவில், பக்தர்கள் அனைவருக்கும், அர்ச்சுனன், பிரசாதம் வழங்கினார். தொடர்ந்து, நாளை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. மறுநாள் தர்மராஜா பட்டாபிஷேகத்துடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.