பதிவு செய்த நாள்
12
மார்
2018
01:03
சென்னிமலை: சென்னிமலை அருகே, 1,000 ஆண்டு பழமையான கோவிலில், பக்தர்கள் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். சென்னிமலை அருகே, நல்லபாளியில் செவ்வந்தீஸ்வரர் கோவில் உள்ளது. சென்னிமலை முருகன் கோவில் அமையும் முன்பே, இக்கோவில் இருப்பதாக கூறப்படுகிறது. கோவில் அருகே, பாறை நடுவில் ஒரு பாளி (குளம்) உள்ளது. இதில் என்றுமே தண்ணீர் வற்றாமல் இருப்பதால், நல்லபாளி என பெயர் பெற்றது. நூறு ஆண்டுகளுக்கு முன், இந்த பாளியில் இருந்துதான், சென்னிமலை முருகன் கோவிலுக்கு, தீர்த்தம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், திருப்பணிகள் செய்ய, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், பாலாலயம் செய்யப்பட்டது. கட்டடம் கட்டும் பணியும் தொடங்கியது. ஆனால், ஓரிரு மாதத்தில் பணி நின்றது. பராமரிப்பில்லாததால் கோவிலை சுற்றிய பகுதி, முள்செடி முளைத்து புதர் மண்டியது. இதனால் சிவனடியார்கள் வேதனை அடைந்தனர். இந் நிலையில், ஈரோடு திருத் தொண்டேசுவரர் உழவார பணிக்குழு சார்பில், 120 பேர் நல்லபாளிக்கு நேற்று வந்தனர். செவ்வந்தீஸ்வரர் கோவில் பகுதியில் உழவாரப் பணியில் ஈடுபட்டனர். கோவில் திருப்பணியை தொடங்க, அறநிலையத்துறை அனுமதி அளித்தால், பக்தர்களின் உதவியுடன், பணியை தொடங்க தயாராகவுள்ளோம் என்றும் தெரிவித்தனர்.