பதிவு செய்த நாள்
24
மார்
2018
02:03
சென்னை: கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று, சூரிய, சந்திர வட்ட வாகனங்களில், சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில், பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாள் விழாவான, (மார்ச் 23), காலை, 8:30 மணிக்கு, சூரிய வட்ட வாகனத்தில், கபாலீஸ்வரர் எழுந்தருளி, மாட வீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கற்பகாம்பாள், சிங்காரவேலர், நடன விநாயகர், சண்டேசர் ஆகிய மூர்த்திகளும், வீதியுலா வந்தனர். இரவு, 9:00 மணிக்கு, சந்திர வட்டம் வாகனத்தில், கபாலீஸ்வரரும்; கிளி வாகனத்தில், கற்பகாம்பாளும்; அன்ன வாகனத்தில், சிங்காரவேலரும், மாடவீதிகளை வலம் வந்தனர்.
பங்குனி விழாவின் மூன்றாம் நாளான, (மார்ச் 24), காலை, 6:00 மணிக்கு, அதிகார நந்தி காட்சி, திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா, கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்ளி ரிஷப வாகனங்களில், சுவாமி வீதி உலா நடக்கிறது.
அன்னதானத்திற்கு அனுமதி அன்னதானம் வழங்குவது குறித்து, போலீசார் அறிவித்துள்ளதாவது:
பங்குனிப் பெருவிழாவின்போது, மாட வீதிகளில், அன்னதானம் வழங்குவதற்கு, காவல் துறையின் முன் அனுமதி அவசியம் பெற வேண்டும். தேர் திருவிழா, அறுபத்துமூவர் திரு விழாவின் போது, அனுமதி இன்றி அன்னதானம் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் பாதுகாப்பு கருதியும், மாடவீதிகளில் ஏற்படும் கழிவுகளை கட்டுப்படுத்தவும், உணவு வீணாவதை குறைக்கும் நோக்கிலும், இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அனுமதியுடன், அன்னதானம் வழங்குவோர், இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்; கழிவுகளை, முறையாக அகற்ற வேண்டும்.
இவ்வாறு போலீசார் அறிவித்துள்ளனர்.