பதிவு செய்த நாள்
26
மார்
2018
12:03
நாகப்பட்டினம்: நாகை மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் நடந்த குருத்தோலை பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் முன், ஜெருசலேம் நகரை நோக்கி சென்ற போது, மக்கள் கைகளில், குருத்தோலை ஏந்தி வரவேற்றதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் குருத்தோலை பவனியை, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.இதன்படி, நாகை மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை பவனி, நேற்று நடந்தது. நாகை அடுத்த வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று காலை, 6:00 மணிக்கு சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது.பின், 7.00 மணிக்கு குருத்தோலை புனிதம் செய்யப்பட்டு, பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில், குருத்தோலை பவனி நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கானோர் கைகளில் குருத்தோலை ஏந்தி, தேவாலயத்தை ஒட்டிய வீதிகளில் பவனி வந்தனர்.தொடர்ந்து, பேராலய கீழ் கோவிலில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, ஆகிய மொழிகளில் திருப்பலி, ஜெபமாலை நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.