பதிவு செய்த நாள்
27
மார்
2018
02:03
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. தென் திருப்பதி என அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலை ரூ.3 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் 2016- ஜூன் முதல் நடந்து வந்தது.கும்பாபிஷேக விழா மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. காலை 5:00 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 6:40 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள் , ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் சன்னதி கும்பாபிஷேகம் நடந்தது.ஸ்ரீவில்லிப்புத்துார் பட்டாச்சார்யார்கள் கோபுர கலசங்களுக்கு நன்னீராட்டு செய்தனர். காலை 9:30 மணிக்கு ஆச்சார்யாள் மரியாதை நடந்தது. மாலை 5:00 மணிக்கு கல்யாண உற்சவம், இரவு 9:00 மணிக்கு கருடசேவை புறப்பாடு நடந்தது.நிகழ்ச்சியில் அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள், அலர்மேலு மங்கை தாயார் அறப்பணிக்குழு தலைவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், செயலாளர் ராம.சா.நாச்சியப்பன், பொருளாளர்கள் ராம.சா.சிதம்பரம், வெ.நாராயணன் மற்றும் டிரஸ்டிகள், இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர் ராமசாமி, செயல் அலுவலர் பால தண்டாயுதம் மற்றும் பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை அரியக்குடி ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் அறப்பணி குழுவினர், அலர்மேல் மங்கை தாயார் அறப்பணி குழுவினர் செய்திருந்தனர்.