மதுரை : மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் மண் மணம் மாறாத குடிசைத் தொழில்கள் பல வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கிறது. பாரம்பரிய தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களின் பொருளாதார நிலை தான் தோல்வியில் வீழ்ந்து கிடக்கிறது. மண் சார்ந்த தொழில் செய்வோர் எத்தனை கஷ்டம் வந்தாலும் தாங்கிக் கொண்டு, தொழிலை விட்டு விலகாமல் தொடர்கிறார்கள். இவர்கள் தொழிலின் மீது அளவில்லா பக்தியையும், நம்பிக்கையையும் வைத்துள்ளனர். மதுரை ஒத்தக்கடை அருகே அயிலாங்குடியில் ஆன்மிகம் அருளும் யாகசாலை பூஜைக்கு பயன்படும் குச்சிகளை பக்தியுடன் தயாரித்து வருகிறார் சிவாஜி.
அவர் கூறியதாவது: பல ஆண்டுகளாக இத்தொழில் செய்கிறேன். சில வகை மரங்களும், செடிகளும் பூஜைக்கு மட்டும் தான் பயன்படும். அதன் மதிப்பும் அதிகம் இருக்காது. அதை வெட்டி எடுப்பதில் தடை இல்லாததால் தொழிலை தொடர முடிகிறது. பொதுவாக யாகங்களுக்கு எருக்கலை, கண்மாய், ஆலம், வேப்பம் உட்பட 9 வகை குச்சிகளை பயன்படுத்துவர். அதை எல்லாம் நான் சேகரித்து பதப்படுத்தி, சிறு துண்டுகளாக வெட்டி பேக்கிங் செய்து மதுரை சந்தைக்கு அனுப்புகிறேன். ஒவ்வொரு பையிலும் அப்படியே எடுத்து பயன்படுத்தும் வகையில் அரை கிலோ அளவில் குச்சிகள் இருக்கும். இதை பக்குவப்படுத்தும் மற்றும் பேக்கிங் வேலையை பெண்கள் செய்கிறார்கள். என்னால் சிலருக்கு வேலை கொடுக்க முடிகிறது.
நாள் ஒன்றுக்கு 400 கிலோ வரை குச்சிகள் தயாராகும். ஆர்டர்கள் வந்தால் தான் வேலை. அனைத்து செலவுகளும் போக சிறிதளவு லாபம் நிற்கும். இது கூலி கொடுக்க போதுமானதாக இருக்குமே தவிர பெரிய வருமானம் கிடைக்காது. இருந்தாலும்பராம்பரிய தொழிலை விடாமல் செய்ய வேண்டும் என்ற லட்சியத்தில் தொழிலை தொடர்கிறேன். வங்கிகளில் மானிய கடன் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும், என்றார்.