பதிவு செய்த நாள்
29
மார்
2018
12:03
பழநி : ஐம்பொன் சிலை தயாரிப்பு மோசடி குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், பழநி முருகன் கோவில் அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.பழநி முருகன் கோவிலுக்கு, 200 கிலோ எடையில், உற்சவர் சிலை செய் ததில் முறைகேடு காரணமாக, நிர்வாக அதிகாரி, கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையா ஆகியோரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். நேற்று, டி.எஸ்.பி., கருணாகரன், இன்ஸ்பெக்டர் கார்த்தி அடங்கிய சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழநி வந்தனர். இணை ஆணையர் செல்வராஜிடம், 2004ம் ஆண்டு கோவில் ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தினர்.அப்போது பணிபுரிந்த அலுவலர்கள், சிலை வைக்கும் போது எதிர்ப்பு தெரிவித்தவர்கள், தங்கம் நன்கொடையாக வழங்கி யவர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்த உள்ளனர். மேலும், ஐம்பொன் சிலை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றிருந்த, அறநிலையத் துறை முன்னாள், ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக் - தற்போது இணை ஆணையர் - ஆகியோரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.ஜி., பொன்மாணிக்க வேல், இப்பிரிவுக்கு வந்த பின் கோவில் சிலைகள் திருட்டு, மோசடிகள் குறித்து, நிறைய புகார்கள் வருகின்றன. அப்படித்தான் இந்த புகாரும் வந்தது. ஒரு மாதத்துக்கு முன், ஐம்பொன் சிலையை ஆய்வு செய்தோம். சிலையில் கொஞ்சம் கூட தங்கம் இல்லை. பழநி முருகன் கோவிலில் இல்லாத தங்கமா, ஏன் திருத்தணி கோவிலில், 10 கிலோ தங்கம் வாங்க வேண்டும்.பக்தர்களிடம் எவ்வளவு தங்கம் நன்கொடை வாங்கினர். நிர்ணயிக்கப்பட்ட, 200 கிலோவுக்கு மேலாக, 221 கிலோ எடையில் சிலை செய்தது ஏன் போன்றவை குறித்து விசாரணை நடக்கிறது. தேவைப்பட்டால் முன்னாள், இந்நாள் ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடமும், விசாரணை நடத்துவோம். இவை முடிந்த பின்னரே நவபாஷாண சிலையை கடத்த முயற்சி நடந்ததா என தெரிய வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.