பக்தர்களை பாக்ஸ்களில் தடுத்து நிறுத்தி அனுப்ப பங்குனி உத்திர பாதுகாப்பில் மூவாயிரம் போலீசார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மார் 2018 12:03
திண்டுக்கல் பழநி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்படுவார்கள். மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்களை, 11 பாக்ஸ்களில் தடுத்து நிறுத்தி அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழநியில் தைப்பூசத்தை அடுத்து பெரிய விழா பங்குனி உத்திரத் திருவிழாதான். இது நாளை (மார்ச் 30ல்) நடக்கிறது. இதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருவர். பக்தர்கள் கூட்டத்தில் பாதுகாப்பு பணிக்காக 3 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். பழநி பகுதியில் 120 இடங்களில் கேமரா பொருத்தப்பட உள்ளது.
பாக்ஸ்களில் பக்தர்கள் அடைப்பு: இது குறித்து திண்டுக்கல் எஸ்.பி., சக்திவேல் கூறியதாவது: பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு யானைப் பாதையை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைக்கோயில் வரையிலும் 11 இடங்களில் பாக்ஸ்கள் அமைத்து பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட உள்ளனர். மலைக்கோயில் மேல் சுவாமி தரிசனம் முடித்து அங்கு அதிக நேரம் அமர்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டம் ஒரே நேரத்தில் மலைக்கோயிலில் கூடுவதை தடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகரும் கேமராக்கள் கூட்டத்தில் உலா வரும். 120 இடங்களில் உள்ள கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க உள்ளோம். மாறுவேடத்திலும் 200 போலீசார் உலா வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.