பதிவு செய்த நாள்
05
ஜன
2012
11:01
ஸ்ரீரங்கநாதரை வணங்குவதற்குரிய ஸ்தோத்திரத்தைப் படியுங்கள்: காவிரியின் நடுவில் ஏழு திருமதில்களால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதனே! தாமரை மொட்டு போன்ற விமானத்தில் குடிகொண்டவனே! ஆதிசேஷன் என்னும் கட்டிலில் துயில்பவனே! யோகநித்திரையில் அனைத்தையும் அறிந்தும் அறியாதது போல இருப்பவனே! இடது கையை இடுப்பில் வைத்திருப்பவனே! ஸ்ரீதேவியும் பூதேவியும் வருடுகின்ற திருப்பாதங்களைக் கொண்டவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைப் போற்றுகிறேன்.
கஸ்தூரி திலகமிட்ட நெற்றி கொண்டவனே! காது வரை நீண்டிருக்கும் அகன்ற கண்களைப் பெற்றவனே! முத்துக்கள் இழைத்த கிரீடம் அணிந்தவனே! பக்தர்களின் மனதை அபகரிக்கும் தேக காந்தி கொண்டவனே! தாமரைமலருக்கு ஈடான அழகுமிக்கவனே! ஸ்ரீரங்கநாதா! உன்னைக் காணும் பாக்கியம் எப்போது எனக்கு கிடைக்கும்! மது என்னும் அரக்கனைக் கொன்றவனே! நாராயண மூர்த்தியே! முரனை வென்ற முராரியே! கோவிந்தராஜனே! உன் திருநாமங்களை உரக்கச் சொல்லி வாழ்நாளை எல்லாம் ஒரு நிமிஷம்போல கழிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா? காவிரிக்கரையோரம் வாழ்பவனே! இந்திர நீலமணி போன்ற பேரழகுடன் ஆதிசேஷ சயனத்தில் படுத்திருப்பவனே! உன் அருகில் வாழும் பாக்கியத்தை தந்தருள வேண்டும்.
பெருமானே! புனிதமான காவிரியில் நீராடும் பாக்கியம் எனக்கு வேண்டும். அடர்ந்த பசுமரங்கள் நிறைந்த அழகுமிக்க காவிரி நதிதீரத்தில் நான் வசிக்கும் பேறு பெற வேண்டும். மங்கலம் நிறைந்தவனே! தாமரை மலர் போன்ற கண்களைப் பெற்றவனே! உன்னை பக்தியோடு வணங்கும் பாக்கியத்தை அருள்புரிவாயாக.
ரங்கநாதனே! பாக்கு மரங்கள் நிறைந்ததும், தெளிந்த நீரால் நிரம்பியதும், வேதகோஷத்தால் சூழப்பட்டதும், கிளி, குருவி போன்ற பறவைகள் ஒலியெழுப்புவதும், தரிசித்தவர்க்கு வைகுண்டம் தந்தருளி மோட்சத்தைக் காட்டுவதுமான லட்சுமிகடாட்சம் நிறைந்த ஸ்ரீரங்கத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு என்று கிடைக்குமோ?
எம்பெருமானே! தேவலோக நந்தவனத்தில் அமிர்தம் அருந்தும் பாக்கியம் எனக்கு வேண்டாம். தேவர்களில் ஒருவராகவும் நான் மாற வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் ஒரு நாயாக வாழும் பாக்கியத்தைக் கொடுத்தால் போதும்.
அம்மா! எனக்கு மிகவும் பசிக்கிறது. உடல் நடுங்குகிறது, என்று சொல்லும் குழந்தையிடம் தாய் எப்படி பாசத்தோடு ஓடி வந்து அணைத்து ஆகாரம் தருவாளோ அதுபோல...ரங்கநாதா! என் துயரத்தைப் போக்க வந்தருள்வாயாக.