பதிவு செய்த நாள்
05
ஜன
2012
11:01
சென்னை : கோவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள, முன்னாள் ராணுவத்தினருக்கான தொகுப்பூதியத்தை, 1,500 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த 1992ல், தனது ஆட்சி காலத்தில், கோவில்களில் உள்ள சிலைகள், உண்டியல் பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை பாதுகாக்க, 1,000 இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும், 3,000 முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு, "திருக்கோவில் பாதுகாப்பு படை என்ற அமைப்பை, முதல்வர் ஜெயலலிதா ஏற்படுத்தினார். இப்பாதுகாப்பு படையில் பணியாற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு, 2001ம் ஆண்டு முதல், தொகுப்பூதியமாக, 1,500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் ராணுவத்தினரின் பணி மற்றும் தற்போது உள்ள விலைவாசி சூழலைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதியத்தை, 1,500 ரூபாயிலிருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக, அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.