நாம் இந்த உலகில் செல்வச்செழிப்புடனும், புகழுடனும் நடமாட காரணமானவர்களே பெற்றோர் தான். சில பிள்ளைகள் பெற்றோர் சொல் கேளாமல், அவர்கள் சம்பாதித்து தந்ததை பொழுது போக்குகளில் செலவிட்டு, பெற்றவர்களைப் பழிப்பார்கள். சிலர், தங்களை ஆளாக்கிய பெற்றோருக்கு கஞ்சி கூட தராமல் கொடுமை செய்வார்கள். பெற்றோரைக் கொடுமை செய்யும் பிள்ளைகள், பைபிளைப் படித்திருந்தால் இப்படி செய்திருப்பார்களா? “உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் தாயையும் கனம் பண்ணுவாயாக,” என்பதும், “உன்னைப் பெற்ற தகப்பனுக்கு செவி கொடு, உன் தாய் வயது ஆகும் போது அவளை அசட்டை பண்ணாதே,” என்பதும் அதிலுள்ள வசனங்கள். பெற்றோரை மதிக்காமல் அகால மரணம் அடைவதை விட, அவர்களை மதித்து ஆயுளை அதிகரித்துக் கொள்வதுடன், ஆண்டவரின் ஆசிர்வாதத்தை பெறுவோம். இந்த வசனங்களை குழந்தைகளுக்கு கற்றுத் தந்து, பெற்றோரைக் காப்பாற்றும் எண்ணத்தை விதைப்போம்.