பதிவு செய்த நாள்
04
ஏப்
2018
01:04
மதுரை, மதுரையில் பாரம்பரியமாக கொண்டாடப்படும் சித்திரை திருவிழாவை, கோலாகலமாக நடத்த அனைத்து அரசு துறைகளும் தயாராகும் நிலையில் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புனித தலங்களில் ஒன்றாக மீனாட்சி அம்மன் கோயிலை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கோயில் பகுதியை மேம்படுத்த 11 கோடி ரூபாயில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தொடர் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது.இந்நிலையில் சித்திரை திருவிழாவையொட்டி ஏப்., 15 முதல் இப்பகுதியில் துாய்மைப்பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளன. தினமும் 200 ஊழியர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபடுகின்றனர். இப்பணிகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். ஏப்., 18 திருவிழா கொடியேற்றம், ஏப்., 27 திருக்கல்யாணம், ஏப்., 28 தேரோட்டம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சிகளையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி ஏப்., 27 முதல் மே 2 வரை வடகரை பகுதிகளில் துாய்மை பணிகள் நடக்க கமிஷனர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார். விழா நாட்களில் குப்பையை உடனுக்கு உடன் அகற்றுதல், துாய்மையான குடிநீர் வழங்குதல், நடமாடும் கழிப்பறைகள் அமைத்தல் மற்றும் கூடுதலாக சில பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.