சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நாளை தேரோட்டம் நடக்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருமுறை தரிசன விழாக்கள் நடைபெறும்.இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேர் திருவிழா நாளை (7ம் தேதி) நடக்கிறது. அதையொட்டி அன்று அதிகாலை 5 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி அம்பாள் சித்சபையில் இருந்து தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டு நகர வீதிகள் வழியாக தேரோட்டம் நடக்கிறது. தேர் நிலைக்கு வந்த பிறகு தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டு, இரவு 8 மணிக்கு ஏக கால லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.