ஆழ்வார்குறிச்சி:ஆழ்வார்குறிச்சி வேங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று கோலாகலமாக நடந்தது.மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா பெருமாள் கோயிலில் மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆழ்வார்குறிச்சி கீழகிராமத்தில் வேங்கடேச பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி நாளான நேற்று அதிகாலை சிறப்பு பஜனை நடந்தது. பின்னர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியருடன் அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின்னர் கும்ப ஜெபம், வேதபாராயணம், சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள் நடந்தது. மாலையில் சொர்க்க வாசல் திறப்பு விழாவும், நாக வாகனத்தில் பெருமாள் தேவியர்களுடன் எழுந்தருளலும், வீதியுலாவும் நடந்தது. பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனை, விசேஷ தீபாராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது.விழா ஏற்பாடுகளை கட்டளைதாரர் ஆழ்வார்குறிச்சி எஸ்டிசி கிளை துவக்கப்பள்ளி பணிநிறைவு தலைமையாசிரியர் உலகநாதன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.