மதுரை சித்திரை திருவிழாவிற்காக தயாராகும் விசிறிகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2018 03:04
கொடிமங்கலம்: மதுரையில் சித்திரை திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்க கொடிமங்கலத்தில் தென்னங்கீற்று விசிறிகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. திருவிழாவை காண வரும் பக்தர்களுக்கு தனியார் நிறுவனங்கள் சார்பில் விசிறி, துணிப்பை, சிறுவர் விளையாட்டு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். இம்முறை கோடைக்கு ஏற்ற குளுமையான தென்னங்கீற்று விசிறிகளை பக்தர்களுக்கு வழங்க சில தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இதற்காக கொடிமங்கலத்தில் தென்னங்கீற்று விசிறிகள் தயாரிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர். வீரம்மாள் கூறியதாவது: வியாபாரிகளின் ஆர்டரின்படி விசிறிகளை தயாரிக்கிறோம். தென்னந்தோகை ஒன்று 2 ரூபாய்க்கு வாங்குகிறோம். அவற்றை பக்குவமாக கிழித்து விசிறிகள் தயாரிக்கிறோம். விசிறி ஒன்றின் விலை 2.50 ரூபாய். சீசன் அல்லாத நேரங்களில் விசிறி ஒன்று 2 ரூபாய். நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் நபர் ஒருவர் 25 விசிறிகள் தயாரிப்பர், என்றார்.