பதிவு செய்த நாள்
19
ஏப்
2018
01:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், தீ விபத்துக்குள்ளான வீர வசந்தராய மண்டபத்தில் புதிய துாண்களை நிறுவ சென்னை ஐ.ஐ.டி., குழு ஆய்வு நடத்துகிறது.தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது:சேதமடைந்த வீர வசந்தராய மண்டபத்தின் ஒரு பகுதி புனரமைக்கப்படும். இம்மண்டபத்தில் பழைய கற் துாண்களுக்கு பதிலாக, புதிய கற் துாண்களை நிறுவ ஏற்பாடு நடக்கிறது. சில கற்துாண்களில் புகை படிந்துள்ளது. அதை அகற்றினால் கற்கள் பளிச்சென உள்ளது. எனினும், அக்கற்துாண்களின் உறுதிதன்மை குறித்தும் ஆய்வு நடக்கிறது.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் இருந்து கற்கள் மாதிரி எடுத்து, அதன் உறுதித்தன்மை குறித்து சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்கின்றனர். கட்டட இடிபாடுகள் 90 சதவிகிதம் அகற்றப்பட்டுள்ளன. திருக்கல்யாணம் முடிந்ததும் மணக்கோலத்தில் அம்மன், சொக்கர் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருள்வர். இதில் மாற்றங்கள் செய்யப்படவில்லை, என்றார்.இணை கமிஷனர் நடராஜன், நேர்முக உதவியாளர் சிவக்குமார் உடனிருந்தனர்.