பதிவு செய்த நாள்
19
ஏப்
2018
01:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம், நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னதி முன் உள்ள, 62 அடி உயர தங்கக்கொடி மரம் மற்றும் வளாகம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வேத மந்திரம் முழங்க, மங்கள வாத்தியம் ஒலிக்க, சேத்தி மண்டபத்தில் இருந்து, அலங்காரத்தில் சுவாமி பிரியாவிடை, தங்கக்கொடி மரம் முன், காலை, 9:40 மணிக்கு, எழுந்தருளினார். முன்னதாக, விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, சண்டீஸ்வரர் எழுந்தருளினர். கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடியேற்றம், காலை, 10:10 மணிக்கு, கோலாகலமாக நடந்தது. வேத மந்திரம், தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது. தங்கக்கொடி மரம், சுவாமி பிரியாவிடை, விநாயகர், சுப்பிரமணியசுவாமி, சண்டீஸ்வரர் சுவாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 17 ஆயிரம் பேர் தரிசிக்க ஏற்பாடு : மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின், முத்திரை பதிக்கும் நிகழ்வாக, ஏப்., 27ல் நடக்கும் மீனாட்சி சொக்கர் திருகல்யாணத்தை, 17 ஆயிரம் பேர் நேரடியாக தரிசிக்கலாம்.
தக்கார் கருமுத்து கண்ணன் கூறியதாவது: திருக்கல்யாணத்தை இலவசமாக தரிசிக்க, தெற்கு கோபுரம் வழியாக, 6,000 பேர் அனுமதிக்கப்படுவர். இலவசம், கட்டண தரிசனம் உட்பட, 17 ஆயிரம் பேர், தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் நடக்கும் பகுதியில், 200 டன், ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்குள், ஆறு, வெளியில், 14, எல்.இ.டி., மூலம், நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படும். சுகி சிவம், பக்தி சொற்பொழிவு நடத்துகிறார். கோவில் சார்பில் ஆடி வீதிகள், சித்திரை வீதிகளில் மட்டுமே, மொய் விருந்து காணிக்கை செலுத்த, கவுன்டர்கள் செயல்படும். பக்தர்களுக்கு ரசீது வழங்கப்படும். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. ஏப்., 23 முதல் டிக்கெட் பெறலாம். பக்தர்களுக்கு தாலிக்கயிறு, மஞ்சள் கிழங்கு, குங்குமம் அடங்கிய பிரசாத பை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.