ஸ்ரீ கொங்கு வடுகநாத சுவாமி கோவிலில் நாளை மறுதினம் மஹா கும்பாபிஷேகம்
பதிவு செய்த நாள்
23
மார் 2026 01:03
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் கரிவரதராஜ பெருமாள் கோவில், கொங்காலம்மன், சின்னம்மன் மற்றும் பரிவார தெய்வ சன்னதிகளில் திருப்பணிகள் முடிந்து, மஹா கும்பாபிஷேகம், 25ம் தேதி(நாளை மறுநாள்) கோலாகலமாக நடைபெற உள்ளது. நேற்று காலை புதிய விக்ரஹங்களுக்கு கண் திறக்கும் பூஜை; கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம், மாமாங்கம் பர்வதவர்த்தினி உடனமர் ராமலிங்க சுவாமி கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து, மங்கள இசை, வாண வேடிக்கையுடன் கோவிலுக்கு ஊர்வலமாக பக்தர்கள் சென்றனர். மாலையில், யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று துவங்கி, 25ம் தேதி அதிகாலை வரை, தொடர்ந்து, காலவேள்வி பூஜைகள், யாகசாலை பூஜைகள், திருமுறை விண்ணப்ப வழிபாட்டுடன் நடைபெற உள்ளது. வரும், 25ம் தேதி காலை, 6:00 மணி முதல், 7:00 மணிக்குள், கொங்காலம்மன், சின்னம்மன், அய்யப்ப சுவாமி விமானகலசம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை, 9:00 முதல், 9:30 மணிக்குள், மூலாலய விமான கலசம், ராஜகோபுரம், பரிவார தெய்வங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 10:00 முதல், 10:30 மணிக்குள், கொங்கு வடுகநாத சுவாமி, ஸ்ரீசவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மாலை, 3:00 மணிக்கு மஹா அபி ேஷகம், அலங்காரபூஜை, தசதரிசனம், கோபூஜை, உபசார பூஜைகள், சுவாமி திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதியுலா நடைபெறும். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, 22ல் துவங்கி, 25ம் தேதி வரை அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று மதியம், ‘முளைப்பாரியின் முக்கியத்துவம்’ என்ற ஆன்மிக சொற்பொழிவு, வள்ளி கும்மி ஆட்டம்; சோமனுார் ஊஞ்சப்பாளையம் குழுவினரின் காவடி ஆட்டம் நடந்தது. இன்று கொடுவாய் அழகுமயில் குழுவின் வள்ளி கும்மியாட்டம், 24 ம் தேதி இன்னிசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர்கள், திருப்பணி குழுவினர், செயல் அலுவலர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
|