திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ செவலை ரோட்டில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் அம்மனுக்கு சாகைவார்த்தல் விழா நடந்தது. சாகைவார்த்தல் விழாவையொட்டி, கடந்த 19ம் தேதி காலை, தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்திகரகம் அழைத்து வரப்பட்டது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்‚ அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை சந்தனகாப்பு அலங்காரத்தில் சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் ஊர்வலமாக கூழ் எடுத்து வந்து சுவாமிக்கு படையலிட்டனர். இரவு கும்பம் கூட்டுதல் வைபவம் நடந்தது. தொழில் அதிபர் டி.கே.டி.பாபு தலைமையில் நடந்த இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.