‘ஐ.எஸ். பாஸ்’ இருக்கு.. நாங்களும் ‘பிரஸ்’ : மதுரை சித்திரை திருவிழாவில் தொடரும் கூத்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2018 01:04
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் பத்திரிகை அல்லாத புகைப்பட கலைஞர்களால் பக்தர்கள், போலீசார் நொந்து போயுள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவுபடி இக்கோயிலுக்குள் அலைபேசி கொண்டு செல்ல தடை உள்ளது. சித்திரை திருவிழாவிற்காக பத்திரிகையாளர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் படம் எடுக்க போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்து, அவர் வழங்கிய நுண்ணறிவு பிரிவின் அடையாள அட்டையை காண்பித்து படம் எடுத்து வருகின்றனர்.
அதேசமயம் சில தனி நபர்கள் கோயில் ஊழியர்கள், போலீஸ் அதிகாரிகள் மூலம் நுண்ணறிவு பிரிவு அடையாள அட்டை பெற்றுள்ளனர். இதை நகல் எடுத்தும் போலி அட்டைகளுடன் சிலர் வந்து செல்கின்றனர். இதில் சிலர் அம்மன், சுவாமிக்கு (உற்சவர்கள்) அலங்காரம் ஆரம்பிக்கும் முன்பே (திரையிட்டு மறைத்திருந்தும்) படம் எடுக்கின்றனர். இதை காண்பித்து ஆர்டர் பெற்று படங்களை விற்கின்றனர். இன்னும் சிலர் சுவாமிகளின் கிரீடம் முதல் பாதம் வரை தனித்தனியாக ‘ஜூம்’ செய்து (அதன் டிசைன்களுக்காக) படம் எடுக்கின்றனர். போலீசார், கோயில் பணியாளர்கள் எச்சரித்தால் ‘எங்களிடம் ‘ஐ.எஸ். பாஸ்’ இருக்கு, நாங்க ‘பிரஸ்’ என பத்திரிகையாளர்கள் முன்னிலையே மிரட்டுகின்றனர். பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் கோயிலின் உட்புறத்தில் நடப்பதால் அசம்பாவிதங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு கருதியும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.