பதிவு செய்த நாள்
25
ஏப்
2018
10:04
அவிநாசி: அவிநாசியிலுள்ள நான்கு ரத வீதிகளில், நமசிவாய திருமந்திரம் ஒலிக்க, சிவகண பூத வாத்தியங்கள் இசைக்க, அறுபத்து மூவர் திருவிழா, நேற்றிரவு கோலாகலமாக நடந்தது. கொங்கேழு சிவாலயங்களில் சிறப்பானது, முதலையுண்ட பாலகனை சுந்தரமூர்த்தி நாயனார் மீட்டு, தேவார பாடல் பெற்ற தலம், தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய தேர் உள்ளது என பல்வேறு சிறப்புகளை பெற்ற, அவிநாசி, பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், சித்திரை தேர்த்திருவிழா, கடந்த, 20ல் கொடியேற்றத்துடன் திருவிழாவில், முக்கிய நிகழ்வான, அறுபத்து மூவர் திருவிழா நேற்று நாள் முழுவதும் நடந்தது. காலை, பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்களுக்கும், பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன்பின், அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், நாயன்மார்கள், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
நேற்று இரவு, 8:00 மணிக்கு, கோவில் தீப ஸ்தம்ப வளாகத்தில், மூஞ்சூறு வாகனத்தில் விநாயக பெருமான், ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர், காமதேனு வாகனத்தில், கருணாம்பிகை அம்மன், மயில் வாகனத்தில், ஸ்ரீ சுப்ரமணிய பெருமான், ரிஷப வாகனத்தில், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பஞ்சமூர்த்திகளுக்கு, முன் 63 நாயன்மார்களை, பக்தர்கள் சுமந்து கொண்டு நின்றனர். பெங்களூரு வாழும் கலை ஆசிரம, வேத விக்ஞான் மஹா பாடசாலை மாணவர்களும், ஓதுவா மூர்த்திகளும், அவிநாசி தேவாரம், சிவபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்ய, ரிக், சாம, யஜூர் மற்றும் அதர்வன வேதங்களை, சிவாச்சார்யார்கள் முழங்க, சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம் நமசிவாய என கோஷமிட்டு, வழிபாடு நடத்தினர். அதன்பின், நான்கு ரத வீதிகளில், சுவாமி திருவீதியுலா நடந்தது. கரூர் பசுபதீஸ்வரர் கோவில் சிவனடியார்கள் மற்றும் திருப்பூர் சிவனடியார்கள் சிவகண பூத பஞ்ச வாத்தியங்களை இசைத்தனர். முன்னதாக, பஞ்சமூர்த்திகள் - 63 நாயன்மார்கள் வழிபாட்டுக்குழு அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நான்கு ரத வீதிகளிலும், வண்ண அலங்கார குடைகள் கட்டப்பட்டு, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இன்று இரவு, திருக்கல்யாண உற்சவமும், நாளை அதிகாலை பூர நட்சத்திரத்தில், பஞ்சமூர்த்திகள், ரதோற்சவமும், 27ம் தேதி, காலை, 10:00 மணிக்கு, பெரிய தேரோட்டம், 28ல், அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் தேரோட்டம் ஆகியன நடக்கிறது.