பதிவு செய்த நாள்
24
ஏப்
2018
05:04
நாமகிரிப்பேட்டை: ஒடுவன்குறிச்சி, தேர்த்திருவிழாவில் அக்னி சட்டியுடன், பூஜாரி உருளுதண்டம் போட்டார். நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அடுத்த, ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோவில் பண்டிகை, மார்ச், 8ல் துவங்கியது. மூன்று மாதம் நடக்கும் இவ்விழாவில், கடந்த, 20ல் இருந்து, ஏழு நாட்களுக்கு பொங்கல் வைத்து கொண்டாடப்படும்.
இன்று காலை, பூஜாரிகள் பழனிசாமி, கணேசன் ஆகியோர் பூச்சட்டியுடன் கோவிலை சுற்றி வந்தனர். சட்டியை மாற்றும் முன் முட்டி போட்டு நடந்தனர். பழனிசாமி பூச்சட்டியுடன் கோவிலைச் சுற்றி உருளுதண்டம் போட்டார். பின்னர், அதிலிருந்த நெருப்பை கோவில் முன் கொட்டியவுடன், பக்தர்கள் அதை திருநீறாக நெற்றியில் பூசிக்கொண்டனர். தொடர்ந்து, அருள் வந்த பழனிசாமி, பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறினாலோ அல்லது ஏதாவது கோரிக்கையை மனதில் நினைத்துக்கொண்டோ சாட்டையடி வாங்கிச் செல்கின்றனர். இந்த பழக்கம், 40 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து, பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடந்தது. நாளை தேர் வடம் பிடித்தல், அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.