பதிவு செய்த நாள்
26
ஏப்
2018
10:04
தஞ்சாவூர்: உலகபுகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா ஆரூரா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏறத்தாழ நுாற்றுண்டுகளுக்கு பிறகு புதிய தேர் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடந்து வருகிறது.
இந்தாண்டு நான்காம் ஆண்டாக நடந்தது. பதினாறை அடி உயரம் கொண்ட தேரில் சுமார் 25 அடி உயரத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. விழா தொடர்ந்து 18 நாள்கள் நடைபெறும்.விழாநாள்களில், காலை,மாலைகளில் சுவாமிகள் பல்வேறு வாகன வீதி உலா,திருமறை உலா என நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று அதிகாலை, 4.00 மணிக்கு பெரிய கோவிலில் இருந்து விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் தியாகராஜர் உடனுறை கமலாம்பாள் சுவாமிகளை தேர் மண்டபம் அமைந்திருக்கும் இடமான மேலவீதிக்கு பக்தர்கள் துாக்கி வந்தனர். அங்குள்ள தேர்மண்டபத்தில் சுவாமிகளை வைத்து பூஜைகள் செய்தனர். இதன்பின்னர் முளைப்பாறி, மேளதாளம், ஓதுவார்கள் ஆகியோர்கள் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முன்னதாக அமர்ந்தனர். இதை தொடர்ந்து விநாயகர், வள்ளி,தெய்வானையுடன் சுப்ரமணியர் ஆகிய சுவாமிகளை தேருக்கு முன்னதாக இரண்டு சிறிய தேர்களில் வைத்தனர். தியாகராஜர் உடனுறை கமலாம்பாள் சுவாமியை தேரில் வைத்தனர். இதன்பின்னர் நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகளை வைத்தனர்.
அதன்பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 5.40 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. அப்போது பக்தர்கள் தியாகேசாஆரூரா என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதன்பின்னர் தேர் மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக தேர் மண்டபம் இருக்கும் இடமான மேலவீதியை 10.30 மணிக்கு வந்தடைந்தது. பக்தர்கள் தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக மேலவீதி, தெற்கு வீதி ஆகிய இடங்களில் தலா 3 இடங்களிலும், வடக்குவீதி, கீழவீதி ஆகிய இடங்களில் தலா 4 இடங்கள் என்று மொத்தம் 14 இடங்களில் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து 18 நாட்கள் நடக்கும் சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி கொடியிறக்கப்பட்டு நிறைவு பெறுகிறது. தேரோடும் வீதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.