பதிவு செய்த நாள்
26
ஏப்
2018
01:04
மேல்மருவத்துார்: ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், உலக நன்மைக்காக, வரும், 29ம் தேதி, சித்திரை பவுர்ணமி விழா நடைபெறுகிறது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும், சித்திரை பவுர்ணமி விழா நடைபெறுகிறது. இந்த ஆண்டு விழா, 29ம் தேதி மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. அன்று, உலக நன்மைக்காக, 1,008 யாக குண்டங்கள் அமைத்து, கலச விளக்கு வேள்வி பூஜையை, பங்காரு அடிகளார் துவக்கி வைக்கிறார். சித்தர் பீட வளாகத்தில், வேள்வி பூஜைக்கான குருபூஜை, 20ம் தேதி, யாக குண்டங்கள் அமைக்கும் பணியுடன் துவங்கியது.
இங்கு, முக்கோணம், சதுரம், ஐங்கோணம், அறுகோணம், எண்கோணம், வட்டம், நாகவடிவம், சூல வடிவங்களில், யாக குண்டங்கள் அமைக்கும் பணியில், செவ்வாடை பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். அடிகளார் சக்கரம் என்ற பிரமாண்ட சக்கரமும் அமைக்கப்படுகிறது. தமிழகம் மட்டும் இன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள், இதில் பங்கேற்கின்றனர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர், செந்தில்குமார், அன்னதானத்தை துவக்கி வைக்கிறார். தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர் ஆகிய மாவட்ட மன்றங்களும், தஞ்சாவூர்மாவட்ட தலைவர், வாசன் தலைமையிலும், சக்தி பீடங்களின் இணை செயலர், ராஜேந்திரன் பொறுப்பிலும், விழா ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.