பதிவு செய்த நாள்
27
ஏப்
2018
10:04
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், முத்திரை பதிக்கும் நிகழ்வாக மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் இன்று (ஏப்.,27) கோலாகலமாக நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. சித்திரை திருவிழாவின் 10 ம் நாளான இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. கோயிலுக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக திருப்பரங்குன்றத்தில் இருந்து வந்த முருகப் பெருமானும், பவள கனிவாய் பெருமாளும் எழுந்தருள, மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருமண கோலத்தில், பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற சமயத்தில் பெண்கள் பலரும் தங்களின் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.
விழாவை முன்னிட்டு மதுரை விழாக்கோலம் பூண்டது. மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணதிற்காக மணமேடை வண்ண மலர்கள், வெட்டி வேர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. திருக்கல்யாணம், எல்.இ.டி., அகண்ட திரை களில் கோவிலுக்குள், வெளியே நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. வரும், 28 காலை, 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.