கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாய நாகநாதசுவாமிகோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு ராகுபகவான் அருள்பாலிப்பது சிறப்பு. இங்கு சிவகாமி அம்பாள் உடனாய நடராஜர் பெருமான் சன்னதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டும் நேற்று முன்தினம் காலை சிவகாமி அம்பாள் உடனாய நடராஜபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சிறப்பு புஷ்பலங்காரத்தில் தீபாராதனைக்கு பின் நடராஜர், சிவகாமி அம்பாள் தனித்தனி சப்பரத்தில் வீதியுலா வந்தனர். இதில், திரளான பெண்கள், பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை உதவி ஆணையர் மோகனசுந்தரம் செய்திருந்தார்.