பதிவு செய்த நாள்
28
ஏப்
2018
02:04
புன்செய்புளியம்பட்டி: காமாட்சியம்மன் கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு, பால்குடம் எடுத்தும், அலகு குத்தி தேர் இழுத்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டியில் பிரசித்தி பெற்ற, காமாட்சியம்மன் கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு சித்திரை விழா, கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, காமாட்சியம்மன் - ஏகம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து அரண்மனை பொங்கல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, பக்தர்கள், அலகு குத்தி தேர் இழுத்தனர். காமாட்சியம்மன் கோவிலில் துவங்கி, நம்பியூர் சாலை, கோவை பிரதான சாலை, பவானிசாகர் சாலை வழியாக, ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். இரவில், காமாட்சியம்மன் உற்சவர் திருவீதி உலா நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீராட்டு, 30ல் மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது.