ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலில் 18 அடி நீள பத்மநாபர் சிலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2018 02:04
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே காம்பார்பட்டி ஆத்மலிங்கேஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக 18 அடி நீள அனந்த சயன பத்பநாபர் சிலை கொண்டு வரப்பட்டது. சிலுவத்துார் ஊராட்சி காம்பார்பட்டி ஸ்ரீஆத்மலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்தில் 1008 லிங்கங்களுடன் 3 அடுக்குகளாக புதிய கோயில் கட்டும் பணி துவங்கியுள்ளது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லிங்கங்களை அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் தேனியை சேர்ந்த பக்தர் ஒருவர் சொந்த செலவில் அனந்த சயன பத்மநாபர் சிலையை செய்து தர முன்வந்தார். தேனி வெங்கடேஷ்வரா கலைக்கூட சிற்பிகள், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 80 டன் எடையுள்ள கருங்கல்லை கொண்டு வந்தனர். பொதுவாக சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி சிலைகள் தனியாக இருக்கும். இங்கு ஒரே கல்லில் தேவியருடன் பத்மநாபர் சிலை 40 டன் எடையில் வடிவமைத்தனர். திருவனந்தபுரத்தில் 21 அடி மற்றும் ஸ்ரீரங்கத்தில் 16 அடி நீள பத்மநாபர் சிலை உள்ளது. காம்பார்பட்டியில் பிரதிஷ்திடை செய்யப்பட உள்ள சிலை 18 அடி நீளத்தில் செதுக்கப்பட்டுள்ளது என சிற்பிகள் தெரிவித்தனர். லாரி மூலம் நேற்று காம்பார்பட்டிக்கு சிலை கொண்டு வரப்பட்டது. சிலுவத்துாரில் இருந்து தேவராட்டம், வாண வேடிக்கை முழங்க சிலையை அப்பகுதியினர் அழைத்துச் சென்றனர். பூஜை செய்து சிலை இறக்கி வைக்கப்பட்ட பத்மநாபர் சிலை கட்டுமான பணிகள் முடிந்ததும் பிரதிஷ்டை செய்யப்படும் என நிர்வாகிகள் கூறினர்.