பதிவு செய்த நாள்
02
மே
2018
01:05
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, ஊர் முனியப்பன் கோவில் ஆண்டு திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டனர். சேலம், ஆட்டையாம்பட்டி மேல்தெருவில், பழமையான ஊர் முனியப்பன் கோவில் உள்ளது. இங்கு, மூன்று முனியப்பன் சுவாமி சிலைகளை, இப்பகுதி மக்கள் ஊர் எல்லையை காவல் காக்கும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் விழா எடுத்து, ஆடு, கோழிகளை பலி கொடுக்கின்றனர். இந்தாண்டு திருவிழா நேற்று நடந்தது. இதற்காக கோவிலில் உள்ள, 15 அடி உயர பிரமாண்டமான மூன்று சுவாமி சிலைகளையும், மலர் மற்றும் எலுமிச்சம் பழ மாலைகளால் அலங்கரித்தனர். மதியம், 12:00 மணிக்கு நடந்த உச்சிகால பூஜையின்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒன்றுகூடி ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபட்டனர். பல பெண்கள் அருள் வந்து ஆடினர். ஏற்பாடுகளை மேல்தெரு மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.