கண்ணகி கோயில் சுவற்றில் கீறல்: இடியும் முன் சீரமைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2018 12:05
கூடலுார்: தமிழக – கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சுவற்றில் கீறல் ஏற்பட்டுள்ளதால், இடிந்து விழுவதற்குள் சீரமைக்க தொல்லியல் துறை முன்வர வேண்டும்’’ என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் கூடலுார் அருகே தமிழக கேரள எல்லையான வின்னேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய வரலாற்று சிறப்புமிக்க இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும், சேதமடைவது அதிகமாகிக் கொண்டே வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன், கண்ணகி சிலை சேதமடைந்து கை மற்றும் கால் தனியாக கிடந்தது. தற்போது அதையும் காணவில்லை. கால்பகுதி மட்டும் அங்கு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், சித்ராபவுர்ணமி விழா நேரத்தில் மட்டும், சந்தனத்தால் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு அதனை அலங்காரம் செய்து வழிபடுவார்கள். இந்நிலையில், கோயில் சுவர் பகுதியும், கீறல் விடத் துவங்கியுள்ளது. கோயிலின் மேல்பகுதி முழுவதும் சேதமடைந்திருந்ததால், மண் மற்றும் கற்களை எடுத்து தற்காலிகமாக மேலே வைத்து மூடியுள்ளனர். சுவற்றில் ஏற்பட்டுள்ள கீறலால், எப்போது கோயில் இடிந்து விழுமோ என்ற அபாயம் உள்ளது. சித்ராபவுர்ணமி தினம் தவிர, மற்ற நாட்களில் யாரும் அப்பகுதிக்கு செல்ல கேரள வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இதனால்,அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. கோயில் இடிந்து விழுவதற்கு முன் இதனை சீரமைக்க தொல்லியல் துறை, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.